மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு பழைய கட்டடத்தில் நேற்று நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றத்தில் கூடிய முதல் மக்களவை கூட்டத்தில் இந்த மசோதாவை சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் பேசியதாவது:
மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.
இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.







