திண்டிவனம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை, போலீசாரின் ஆதரவோடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர்.
தொடர்ந்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய 10-க்கும் மேற்பட்டோரை, அப்பகுதிமக்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ், சங்கர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மயங்கி கிடந்த மேலும் 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







