தவளை விழுந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு முருக பெருமானை தரிசிப்பதற்காக அன்புச்செல்வம் – ஜானகிஸ்ரீ தம்பதி தங்களது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
அப்போது அவர்களது குழந்தைகள் ஐஸ்கிரீம் வாங்கி தரச்சொல்லி கேட்டதால் திருப்பரங்குன்றம் கோவில் அருகில் இருந்த ஒரு தனியார் ஐஸ்கிரீம் கடையில், நித்ரா ஸ்ரீ, ரக்ஷனா ஸ்ரீ, தாரணி ஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளுக்கு அவர்கள் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அந்த ஐஸ்கிரீமை உண்ட போது அதில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மூன்று குழந்தைகளையும் சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர்.
இதன் பிறகு குழந்தைகளின் பெற்றோர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஐஸ்கிரீம் கடை மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக சுகாதாரமற்ற முறையில் குளிர்சாதன பொருட்களை விற்பனை செய்து வந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் துரைராஜ் மீது 273 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா








