பொல்லாதவன் பட பாணியில் ‘பல்சர் பைக்’ திருட்டு: வசமாக சிக்கிய இளைஞர்கள்

பல்சர் பைக்குகளை மட்டும் தொடர்ந்து திருடி வந்த இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதைத்…

பல்சர் பைக்குகளை மட்டும் தொடர்ந்து திருடி வந்த இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதைத் தொடர்ந்து திருட்டுப்போன வாகனங்களைக் கண்டுபிடிக்க மற்றும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து மணிமங்கலம் மற்றும் படப்பை பகுதிகளில் திருடுபோன இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நாவலூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த
பிரபாகரன் (24), பார்த்திபன் (21), ஹரிஷ் (எ) சாமி (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரத்தூர் சாலை செரப்பனஞ்சேரி, கூடுவாஞ்சேரி, குபேரன் நகர், ஊரப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் திருடிய 5 லட்சம் மதிப்புள்ள 5 பல்சர் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இவர்களுக்கு பல்சர் பைக்குகள் மீது அதிக ஆர்வம் இருந்ததாகவும்,  அதனால் இந்த வகை பைக்குகளை மட்டுமே திருடி சில காலம் பயன்படுத்திவிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வந்ததும், தற்போது மீட்கப்பட்ட 5 வாகனங்களைத் தவிர மேலும் 10க்கும் மேற்பட்ட பல்சர் பைக்குகளை இவர்கள் திருடி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மணிமங்கலம் போலீஸார் தெரிவித்தனர்.

பல்சர் பைக் என்றாலே இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். இந்த வாகனத்தின் தோற்றம் வடிவமைப்பு பிக்கப் மிக அருமையாக இளைஞர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால், எளிதாக திருட கூடிய இருசக்கர வாகனமும் இது தான் இருசக்கர வாகன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.