ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்த இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆபரேஷன் கங்கா திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை அடுத்து, அனைவரையும் பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் பரவலாக வசித்து வந்ததாகவும், குறிப்பாக, தாக்குதல் தீவிரமாக இருந்த ரஷ்ய எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியர்கள் அதிகம் இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இதன் காரணமாக, அவர்களை அழைத்து வருவதில் சவால் இருந்து வந்ததாகத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் இருந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் பயிலும் மாணவர்கள் என்றும் இவர்கள், தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். ரஷ்ய தாக்குதல் தீவிரமாக இருந்த சூழலிலும், பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், உக்ரைனில் இருந்து 22,500 பேர் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








