பட்ஜெட் பலன்கள் முறையாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை யாரும் கவனிப்பதில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத்தில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். பட்ஜெட் நிறைகளும் குறைகளும் இணைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வை கண்டு, எந்த ஒரு குறைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பட்ஜெட் அறிவிப்புகளை எப்படி செயல் திட்டமாக கொண்டு வருகிறார்கள், எப்படி மக்களுக்கு சென்று சேர்ந்து பலன் அளிக்கிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் பட்ஜெட் வெளியிட்டு அந்த பட்ஜெட் மக்களைப் போய் சேருகிறதா இல்லையா என்பதை யாரும் கவனிப்பதில்லை எனவும் கூறினார். சசிகலா தமிழகத்திற்கு வரும்பொழுது அரசியலில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதை பார்க்க தானும் ஆவலோடு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.