மத்தியப்பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ரேவாவில் கட்சி தொண்டர்களிடையே அவர் பேசியதாவது :
தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும்.பாஜகவின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இல்லை, மகளிர் இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களின் நோக்கம் உன்னதமானது என்பதை நிரூபிக்க வரும் தேர்தல்களில் பாஜக 33 சதவீதம் இடங்களை மகளிருக்ஞகு வழங்க முன் வரவேண்டும்.
மற்ற கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி முலாயம் சிங் யாதவ் பூலன் தேவியை மக்களவைத் தேர்தலில் நிறுத்தினார் என்பதையும், ஏழைகளின் குரலாக விளங்கிய பூலன் தேவியை மக்களவைக்கு அனுப்பியது சமாஜ்வாதி கட்சி தான் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த தேர்தல் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறிய பாஜக ஆட்சியில் பணவீக்கம் இரட்டிப்பாக்கியுள்ளது என அகிலேஷ் யாதவ் கூறினார்.







