அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக ஜூலை 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டில் கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்தும் அவரது சமூகம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரின் எம்பி பதவியும் தகுதி இழப்பு செய்யப்பட்டது.
சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செசன்ஸ் நீதிமன்றம், அவருக்கு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் 21ஆம் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.






