அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் அதிகாலை 3மணி அளவில் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் …

அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் அதிகாலை 3மணி அளவில் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல்  அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது  வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 5 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின்  மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல்  கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய  உறவினர்கள்  மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை  ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும்  புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக  அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு  சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இரவு 8 மணிக்கு வரை சோதனை நடைபெற்ற நிலையில்  நான்கு பைகளில்  இருந்து ஆவணங்களை அமலாக்கதுறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
பின்னர் பொன்முடி சாஸ்திரி பவனில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரது காரிலேயே அழைத்து சென்றனர்.
இந்த விசாரணை நள்ளிரவு சுமார் 3 மணி வரை நீடித்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி, அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர்  பொன்முடியுடன்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்டரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீகரீதியாகவும், அரசியல் மற்றும் சட்டரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என  பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.