நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கருப்பு பணத்தை ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை அளிக்க தயார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் பகுதி திமுக சார்பில், பாடி இளங்கோ நகர் பூங்காவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
“அதிமுக ஆட்சியை நம்மிடம் கொடுத்த நேரம் கொரோனா நேரம், கருணாநிதி காட்டிய வழியில் அறிவியலின் துணை கொண்டு தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக முன் எடுத்து கொரோனாவிடம் இருந்து முதலமைச்சர் காப்பாற்றினார்.
பத்தாண்டு சீர்கேட்டை மீட்டெடுக்க வேண்டிய சவால் முதலமைச்சரிடம் இருந்தது, அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு இன்று நாட்டில் நம்பர் ஒன் முதலமைச்சராக திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார். திமுக திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடித்து கொண்டு இருக்கின்றன. மகளிர் உரிமை தொகை திட்டத்தை பெண்கள் உளமார வரவேற்கிறார்கள்.
கருப்பு பண விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார். நான் திரும்பவும் சொல்கிறேன் மன்னிப்பு கேட்க முடியாது. மோடி கூறியது உண்மை. 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பிரச்சார கூட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்று மோடி கூறினார். அதற்கான ஆதாரத்தையும் அளிக்க தயார் என சவால் விடுகிறேன். எனவே நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.பொய்களை பரப்பி, பொய்களை பேசுவதால் உண்மைகள் பாஜக கண்களுக்கு எப்போதும் தெரிவதில்லை. பாஜகவுக்கு மீண்டும் வாக்களித்தால் ஒட்டு மொத்த இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என உதயநிதி தெரிவித்தார்.






