விடுதலை செய்யப்படுவாரா நளினி?- நாளை தீர்ப்பு

  ஆளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது…

 

ஆளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று 31 வருடங்களுக்கு மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் ஆக்கியதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இந்நிலையில்  ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது,  அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதேநேரம் உயர் நீதிமன்றமே கூட  விடுதலை குறித்து பரிசீலிக்கலாம் என கூறியது.

இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.