தமிழ்நாடு முழுவதும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க வேண்டிய 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 1,891குடியிருப்புகள் அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளாக கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவடைந்தள்ளது. அந்த கட்டிடங்களை ஆய்வு செய்தோம், கட்டிடத்தின் தரம் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. முதல்வரின் உத்தரவின் பெயரில், லாயட்ஸ் காலனி, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் மறு கட்டமைப்பு செய்யப்படவுள்ள நிலையில் அவர்களுக்கு இங்கு மாற்று இடம் கொடுக்கப்படவுள்ளது என்றார்.
மேலும், இதற்கு முன்னுள்ள கட்டிடங்களின் ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உள்ளது. இப்போது புதிதாக கட்டவுள்ள கட்டிடங்கள் குறைந்தபட்சம் 80 ஆண்டுகாலம் வரை தரமானதாக இருக்க வேண்டும் என்ற வகையில் கட்டுகிறோம். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்கப்பட்டுருக்க வேண்டிய 60 வளாகங்களில் இருக்க கூடிய 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இடித்து விட்டு தரமான குடியிருப்புகள் கட்ட திட்டம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அவை அல்லாமல் ஏற்கனவே சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளது. அவைகளும் கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். அதில் சில சட்ட ரீதியான பிரச்சினைகள் உள்ளது. அவைகள் இன்னும் 15 நாட்களில் சரி செய்யப்பட்டு வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.








