EWS 10% இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்சபட்ச அநீதியாகும்- திருமாவளவன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உச்சபட்ச அநீதியாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உச்சபட்ச அநீதியாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பு சமூக நீதி கோட்பாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானதாகும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு உச்சபட்ச அநீதியாகும்” என்று தெரிவித்தார்.இந்தச் சட்டத்தில் சமூக நீதி கோட்பாடு பின்பற்றப்படவில்லை என்ற அவர், “அரசியல் அமைப்பு சட்டத்தின் சமத்துவம் என்கிற முக்கியமான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிறது.தீர்ப்பு சமூக நீதியின் மேல் விழுந்த பேரிடியாகும். சங்பரிவார் அமைப்புகளின் ஓபிசி விரோத சதிச் செயலில் உருவானது தான் பொருளாதார அளவுகோலில் உள்ள இட ஒதுக்கீட்டுச் சட்டம்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என விசிக சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.