பதிவு செய்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம்: திருமண இணையதளத்தின் வித்தியாச விளம்பரம்!

ஒரு கிலோ தக்காளி சுமார் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பதிவு செய்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என திருமண தகவல் இணையம் ஒன்று அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொதுவாக…

ஒரு கிலோ தக்காளி சுமார் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பதிவு செய்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என திருமண தகவல் இணையம் ஒன்று அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொதுவாக ஜூலை முதல் நவம்பர் மாதங்களில் தக்காளி விளைச்சல் குறைவாக இருக்கும். அந்த காலகட்டத்தில் அதிக மழை பெய்வதால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். எனவே எளிதாக அழுகும் தன்மை கொண்ட தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக அதன் விலையும் உயரும்.

இந்நிலையில் வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளி ரூ.160க்கு விற்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் தக்காளி விலையை குறைக்கவும், பொதுமக்களுக்கு சலுகை விலையில் தக்காளி கிடைப்பதை உறுதி செய்யவும் குறிப்பிட்ட ரேசன்கடைகள் மற்றும் பசுமைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.  எனினும் வெளிச்சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளியின் விலை குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தக்காளியை வைத்து பல நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் சேலம் கோட்டை பகுதியில் ஹெல்மெட் விற்பனை நிலையத்தை புதிதாக தொடங்கிய முகமது காசிம் என்பவர் வித்தியாசமான ஆஃபரை அறிவித்தார். ரூ.349 க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்தவுடன் அவர் கடையில் ஹெல்மெட் விற்பனை களைகட்டியது. முதல் விற்பனையை தொடங்கி வைத்த நடிகர் பெஞ்சமின், வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ தக்காளியையும் வழங்கினார்.

பொதுவாக புதிய வீடு வாங்கினால் மாதந்தோறும் இஎம்ஐ முறையில் கடனை திருப்பி செலுத்தும் நடைமுறையை அறிவோம். ஆனால் தற்போது நிலம் வாங்கினால் கூட இஎம்ஐ முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. அப்படி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள வித்தியாசமான  விளம்பரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதாவது விமான நிலையம் அருகே வீட்டுமனை புக் செய்ய நாள்தோறும் 150 ரூபாய் இஎம்ஐ செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கு 2 பாக்ஸ் தக்காளி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாக்சில் எத்தனை கிலோ தக்காளி இருக்கும் என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இது அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஆஹா மேட்ரிமோனி என்ற திருமண இணையதளம் ஒன்று இன்றே பதிவு செய்யுங்கள் 1 கிலோ தக்காளி இலவசம் என விளம்பரம் செய்துள்ளது. அதாவது பெண், மாப்பிள்ளை தேடுவதற்கு அலைய வேண்டாம் என்றும், அதேபோல் தக்காளி வாங்கவும் கடை கடையாக அலைய வேண்டாம் என சொல்லாமல் சொல்கிறது அந்த நிறுவனம். தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் வரை இதுபோன்ற பல விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

—-சுப. ராமமூர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.