பாமக நிறுவனரும் தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாள் இன்று. இதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை திரைப்படமாவதாக அதிகார்வபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு ”அய்யா” என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார் என்றும் மேலும் பிக்பாஸ் ஆரி ராமதாஸ் ஆக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராமதாஸ்..
சென்னை மாகாணமாக இருந்த தமிழ் நாட்டில் ஜூலை 25, 1939 அன்று விழுப்புரம் பகுதியில் உள்ள கில்சிவிரியில் பிறந்தார் ராமதாஸ் . சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த ராமதாஸ் 1965 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து மூன்றாண்டுகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.பின்னர் சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அதில் மிகக்குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
1980இல் ஆண்டு வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார் ராமதாஸ். இடஒதுக்கீடு கோரி 1987ல் தமிழகம் முழுவதும் தொடர் சாலை மறியல் நடத்தினார். இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 21 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து 1989-ல் தமிழ் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு அளித்தது. 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இதனை தொடர்ந்து மேலும் தமிழ் நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்துதல், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தல், வணிக நிறுவனங்களுக்கு தமிழ் மொழியிலேயே பெயர்பலகை வைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். மேலும் தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையையும் நிறுவினார். பசுமைத் தாயகம் என்னும் சமூகநல பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் அவர்களின் பிறந்தாள் அன்று அவரது வாழ்க்கை திரைப்படமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







