மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்ட அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வானதி சீனிவாசனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் c.k.குமரவேல் வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் மநீம தலைவர் கமலுடம் பிரதமர், பாஜக மத்திய அமைச்சர்கள் விவாதம் செய்யட்டும். கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களுடன் விவாதத்தை வைத்து கொள்ளலாம். ஏற்கனவே இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மீண்டும் தோற்க தயாராகி வரும் வானதி சீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினரே போதும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியான இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.







