வருமான வரி வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,கடந்த2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில்…

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,கடந்த2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.இதன் மூலம் கிடைத்த 7.37கோடியை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018-ம் ஆண்டுவழக்கு தொடர்ந்தது.

சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதேபோல வருமான வரித்துறை சார்பில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதியின் வாதத்தை ஏற்று இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply