யூடியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாட்சேப்பள்ளியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ்த் தளத்திலேயே ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 21ஆம் தேதி சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துவிட்டு, கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி அதில் இருந்த 77 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து குண்டூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். தடயவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலீசார் கடும் சிரமத்திற்கு பின்னர் இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத், வினை ராமுலு என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் அவர்கள், “10வது, 12 தான் படித்துள்ளோம். ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி என்று யூடியூப் விடியோவைப் பார்த்து தெரிந்து கொண்டோம். அதன் படி ஏடிஎம் மையத்திற்கு சென்று, திட்டமிட்டு கொள்ளையை நிகழ்த்தினோம்…என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அத்தோடு, முதலில் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்தோம். பின்னர் கேஸ் கட்டரை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி கொள்ளை அடித்தோம். தடயங்கள் சிக்காமல் இருப்பதற்க்காக மிளகாய் பொடி தூவி விட்டு பணத்தை எடுததுக் கொண்டு அங்கிருந்து சென்றோம் என எப்படி கொள்ளை அடித்தோம் என்பதைக் கூறியுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட 77 லட்சம் ரூபாய் பணத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.
யூடியூப் பார்த்து ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப்பட்டது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சமூக விரோத செயல் குறித்த வீடியோவை யூடியூப்பில் இருந்த அகற்ற வேண்டும் என யூடியூப் நிர்வாகத்திடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







