மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, மிட்னாப்பூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மம்தா பானர்ஜியின் வாரிசு அரசியல், ஊழல் அரசியல், தவறான ஆட்சி ஆகியவற்றால் தான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு, பலர் வெளியேறுகிறார்கள், என அமித்ஷா குறிப்பிட்டார். மேலும், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவுக்கு வரும் 5 ஆண்டுகளை அளித்தால், மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்றும் அமித்ஷா உறுதிமொழி அளித்தார். முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுனில் மோந்தால், மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்.எல்.ஏ-க்கள், அமித்ஷா முன்னிலையில் பாஜக-வில் சேர்ந்தனர்.







