மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் கமல்ஹாசன், சிவகாசியில் பேசினார். அப்போது, சென்னையில் ஓடும் ஆறான கூவத்தை சுத்தப் படுத்துவேன் என சொன்னவர்கள் யாரும் அதனை செய்யவில்லை என குற்றம் சாட்டினார். அத்தகைய ஆட்சியாளர்களால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டதாக் குறிப்பிட்ட கமல், வரும்கால தலைமுறை சீரழியாமல் இருக்க ஓட்டுக்கு பணம் வாங்குவதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக விருதுநகர் வந்த கமல்ஹாசனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனினும், அவர் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, அவர் கைகளை அசைத்தவாறு தனது பயணத்தை தொடர்ந்தார்.







