தனது தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கே தீர்வு காணாதவர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மூலகொத்தளத்தில் மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள, 100 நாள் திட்டம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தன்னுடைய தொகுதியான கொளத்தூரில், பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கே இன்னும் தீர்வு காணாதவர் மு.க.ஸ்டாலின் என விமர்சித்தார்.
மக்களோடு நெருங்காமல், சட்டை கசங்காமல் அரசியல் செய்பவர் மு.க. ஸ்டாலின் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தயாரிக்கும் படங்கள் பெட்டியில் தான் இருக்கும் என்றும், அவை வெளிவராது என்றும் கூறினார். அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடப்போவதாக வெளியாகி உள்ள தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது போன்று கூறுவதன் மூலம் காங்கிரஸூக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் ராயபுரம் தொகுதியில் தன்னுடன் மோதத் தயாரா என்றும் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.







