பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 54 ஆயிரம் இளநிலை படிப்புகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இந்த தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தரவரிசை பட்டியலில் தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
அப்போது, பொறியியல் தரவரிசை பட்டியலில் 102 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் இதில் 100 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மேலும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தள்ளிப்போகலாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







