கூடலூரில் இருந்து மைசூர் சென்ற கர்நாடகா அரசு பேருந்தை, பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் வழிமறித்த யானைகளால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநில அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர்
புலிகள் காப்பகம் நடுவே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே செல்லும்போது பிறந்த சில
நாட்களே ஆன குட்டியானையுடன் தாய் யானை மற்றும் மூன்று யானைகள் சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து நின்றது. பின்னர் குட்டி யானையை தாய் யானை மற்றும் மற்ற யானைகள் மிகுந்த பாதுகாப்புடன் சாலையில் சிறிது தூரம் அழைத்துச் சென்ற நிலையில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
இதனை பேருந்தில் பயணித்த பயணிகள் திகிழுடன் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம்
மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் காட்டு யானைகளின்
நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் காட்டு யானைகள் அவ்வப்போது சாலை ஓரங்களில் உலா வருவது மட்டுமல்லாமல்
சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வனச்சாலையில் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெ.வீரம்மாதேவி







