தமிழகத்தில் பெருமை மிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க அனுமதி அளிக்கக்கோரி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பினர். மும்பையில் ஆட்சி செய்த மன்னர் சிவாஜியை அங்கு உள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் பெருமை மிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை என வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.







