கூட்ட நெரிசலை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் கூகுள் மேப்பில் புதிய அப்டேட் கொடுக்கப்படவிருக்கிறது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் மக்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் கூகுள் மேப்பில் புதிய அப்டேட் கொடுக்கப்படவிருக்கிறது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு கூட்டம் உள்ளது என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் அந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் தகவல்களுடன் இணையும் வகையிலான Link-ம் இணைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் இதில் உணவு ஆர்டர் செய்யும் போது, எவ்வளவு கூட்டம் உள்ளது? எத்தனை நிமிடங்கள் ஆகும்? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வந்துவிடும். கொரோனா குறித்த தகவல்களும் இருக்கும். இதை அனைத்தையும் பார்த்துவிட்டு, நீங்கள் எங்கு ஆர்டர் செய்ய வேண்டுமோ அங்கு செய்துகொள்ளலாம். அதேபோல் நீங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாலும், அங்கு என்ன நிலைமை உள்ளது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதில் சில அப்டேட்கள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் கொடுக்கப்படவிருக்கிறது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







