சினிமா பற்றி உலகப்புகழ் பெற்ற இயக்குநரான ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் கூற்று ஒன்று உள்ளது. ‘சிறந்த சினிமாவை உருவாக்க உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை; The script, the script and the script’ என்பதே அது. ஒரு சிறந்த script-ஐ (திரைக்கதையை) உருவாக்கினால் போதும், குறைவான கதாப்பாத்திரங்களை கொண்டு ஒரு ‘அப்பார்ட்மெண்ட்’ வீட்டை சுற்றியே ஒரு தலைசிறந்த படத்தை உருவாக்கலாம் என்பதற்கு அவரின் ‘ரியர் விண்டோ (Read window)’ படமே சாட்சி. ‘ரியர் விண்டோ’ போல் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, அவதார் போல் ஆயிரம் கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, திரைக்கதை சரியாக இல்லாமல் என்ன தான் உருண்டு பிரண்டாலும் படம் தேறாது.
ஹிட்ச்காக்கின் பெரும்பாலான படங்கள் நம்மூர் ‘மீடியம் பட்ஜெட்’ படங்களை விட குறைவான செலவில் எடுக்கப்பட்டது தான். எதற்காக இவற்றை மேற்கோள் காட்டுகிறோம் என்றால் சரியான திரைக்கதையை தயார் செய்யாமல் ‘ஹாலிவுட்டுக்கு நிகராக படம் எடுக்கப்போகிறோம்’ என உச்சநட்சத்திரங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் பெரும்பாலான இயக்குநர்கள், இறுதியில் அந்த வண்டியை ப்ரொடியூஸர்கள் மீதோ அல்லது மக்களின் மீதோ ஏற்றிவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் பீஸ்ட் படத்தில் அரங்கேறியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
ஒரு அப்பார்ட்மெண்டை சுற்றியே அவ்வளவு சுவாரஸியமான கதாப்பாத்திரங்களும், காட்சியமைப்புகளையும் உருவாக்கலாம் எனும் போது கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி உருவாக்கப்பட்ட ஒரு ‘மால்’ செட்-ஐ வைத்து படம் என்ற பெயரில் ’ஐஸ் பாய்’ விளையாடப்பட்டுள்ளது. ஒரு மால்-ஐ குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு சுற்றி வந்து ஆய்வு செய்திருந்தால் கூட ரொம்ப சிம்பிளாகவும் சுவாரஸியமாக ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை வந்த முதல் நாள் வசூலை எல்லாம் சுக்குநூறாக உடைத்துள்ளது பீஸ்ட். வெளியான முதல் நாளிலே தமிழகத்தில் 38 கோடி ரூபாயும் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனையை செய்திருக்கிறது. தற்போது வரை 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது எனவும் நாளைக்குள் 200 கோடியை தாண்டிவிடும் எனவும் தகவல்கள் வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. ஆக, படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான தொகையை முதல் நாளிலே வாரிக் குவித்து விட்டது. ப்ரொடெக்ஷன் தரப்புக்கு சேதாரம் இல்லை. ஆனால், நாம் மேலே சொன்னது போல் வண்டி ஆடியன்ஸ் மீது ஏற்றப்பட்டுள்ளது என்பதே இதுவரையிலான பெரும்பாலான மக்களின் விமர்சனம்.
“நான் மூணு மாசத்துக்கு மேல எந்த ஸ்கிரிப்ட்லயும் உக்கார மாட்டேன். அந்த டைமுக்குள்ள என்ன வருதோ அவ்ளோ தான் எழுதுவேன்” என்று பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். ‘அந்த டைமுக்குள்ள’ உங்களால் எழுத முடிந்த திரைக்கதைக்கு ஆடியன்ஸ்-ஐ பொறுப்பேற்க சொல்வது என்ன நியாயம்? என்ற கேள்விகள் தற்போது எழுப்பப்படுகிறது. ஒரு சிறந்த திரைக்கதை மூன்று நாளிலும் எழுதப்படலாம், மூன்று வருடங்களையும் எடுத்துக்கொள்ளலாம். சிந்திப்பதற்கான சிரத்தையே நமக்கான பட்ஜெட். அதை செய்ய தவறுவதால் ‘ Breaking bad’லிருக்கும் ‘The cousins’ கேரக்டர்களை நம் படங்களுக்கு வில்லனாக இறக்கலாம் தவறில்லை. ‘Money heist’ காண்டியாவை கூட ‘வீர ராகவனாக’ மாற்றலாம் அதில் கூட தவறில்லை.
ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மாணவி கல்லூரிக்கு செல்லும் போது உடன் படிக்கும் மாணவர்களாலேயே அச்சுறுத்துலுக்கும் சூழலில், அதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தீவிரவாதிகள்’ என்ற ‘டெம்ப்ளேட்டுக்குள்’ மீண்டும் மீண்டும் ஒரு மதத்தினரையே அடைப்பதை எப்படி சகித்து கொள்ள முடியும்? ஹாலிவுட்டில் இருந்து வில்லன்களை இறக்கினால் ‘காப்பி’ எனும் பழிக்கு ஆளாக நேரிடும் என பாகிஸ்தானில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் வில்லன்களை இறக்குவது எப்படி நேர்மையாகும்? போன்ற கேள்விகளுக்கு நெல்சனும், விஜயும் தான் பதில் சொல்ல வேண்டும்.
‘விஸ்வரூபம் படத்தில் உலகமே வியக்கும் வகையில் ஒரு காட்சியை வைத்திருப்பார் கமல். நேட்டோ படையினர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுடும்போது தவறுதலாக ஒரு பெண்ணை சுட்டுவிடுவார். உடனே ‘ச்சே’என்பது போல் அவர் உச்சுக்கொட்டுவார். இதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக ஆடியன்ஸுக்கு விளக்குவது போல், ‘அமெரிக்க படையினர் குழந்தைகளையும், பெண்களையும் கொல்லமாட்டார்கள்’என்று தீவிரவாதியே பாராட்டு பத்திரம் குடுப்பார். அந்த நேட்டோ படையினரின் ‘ச்சே ( ஆங்கிலத்தில் ******)’ எனும் வார்த்தையைத்தான் 2.30மணி நேர படமாக வித விதமாக சுட்டு வைத்துள்ளார் இயக்குநர் நெல்சன், என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளது.
மீண்டும் படத்தின் மேக்கிங்கிற்கு வருவோம், படத்தின் ஹீரோவால் எந்த சூழலிலும் யாரையும் எப்படியும் எளிதாக கொன்றுவிட முடியும் என்றால், எதற்கு 2.30 மணி நேர படம்? ஓப்பனிங் காட்சியிலே ஒரு சண்டைக்காட்சியை வைத்துவிட்டு இதே போல் தான் படத்தில் எல்லா எதிராளிகளையும் கொன்று தீர்த்துவிடுவார் என்று கூறி ‘End card’ போட்டு விடலாமே! அடுத்தடுத்த தாக்குதலில் இருந்து ஆடியன்ஸாவது தப்பிப்பார்களே!
’Raw’ உளவாளி என்றால் துப்பாக்கியை பயன்படுத்தவே கூடாது என்ற விதி இருக்கிறதா என தெரியவில்லை. மூட்டைப்பூச்சியை கொல்லும் சுலபமான மெஷினாக அவர் தேர்ந்தெடுத்தது கத்தியையும், கோடாரியையும் தான். எதிராளிகளை அடித்துக்கொல்லும் வீர ராகவன், அவர்களிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி ஈஸியாக மற்றவர்களின் சோலியை முடிப்பதை விட்டு, நான் கத்தியாலும் கோடாரியாலும் தான் கொல்வேன் என்று உருண்டு புரள்கிறார். இதனால் நம்ம சோலி தான் முடிகிறது. குளோசப் காட்சியில் இரண்டு பேர் துப்பாக்கியில் சுடுவதை காண்பிக்கிறார்கள். ஆனால் புல்லட் பாயும் போது ‘parallel’ ஆக பல குண்டுகளாக பாய்கிறது. தீபாவளியன்று நாம் வெடிக்கும் ‘டபுள் டக்கர்’பட்டாசுபோல் எதோ புதுவகையான துப்பாக்கி போல் தெரிகிறது. அரபி குத்து பாடலை அனிருத் கண்டுபிடித்ததாக நெல்சன் கூறியிருப்பார்.அதுபோல் இந்த டபுள் டக்கர் துப்பாக்கியை நெல்சன் கண்டுபிடித்திருப்பார் என்றே தோன்றகிறது என்றும் சிலர் பேசி வருகின்றனர்.
படத்தில் விஜயை நோக்கி சுடப்பட்ட குண்டுகளை எடைக்கு போட்டால் பீஸ்ட் முதல்நாள் வசூலையே மிஞ்சிவிடும் போல. வீர ராகவன் மற்றும் உடன் இருக்கும் அனைவரும் என்ன சொன்னாலும் நம்புகிறார்கள் அந்த அப்பாவி வில்லன்கள். வல்லரசு விஜய் காந்த் போல் 10 நிமிடம் ‘அட்வைஸ்’ செய்திருந்தால் அவர்களே துப்பாக்கியை கீழே போட்டு சரண்டர் ஆகிருப்பார்கள். அதை விடுத்து ரத்தம் தெறிக்க தெறிக்க கொடூர கொலைகளை அரங்கேற்றுகிறார் வீர ராகவன். ஆளுக்கு இரண்டு ‘குருவி ரொட்டி’வாங்கி கொடுத்திருந்தால் வீர ராகவனுக்கு மாலின் உள்ளே இரண்டு பேனர வைத்திருப்பார்கள். அப்படித்தான் அவர்களின் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாஸ்டர் படத்தில் 50 ரூபாய் காப்பு -ஐ வைத்து உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சியின் உணர்வில் 10% கூட இது ஏற்படத்தவில்லை என்பது சோகத்திலும் சோகம். படத்தில் ஓட்டை இல்லை, ஓட்டையில் தான் படமே உள்ளது என்பதே பெரும்பாலானவர்களின் விமர்சனமாக உள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் எடுத்த ஒரு புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ், அட்லீ ஆகிய மூவரும் இருப்பார்கள். அதைப்பற்றி தன்னுடைய நேர்காணலில் குறிப்பிட்ட விஜய், “அன்னைக்கு மூணு பேரும் எதோ சீரியஸா அடுத்த படத்துக்கு கதைய பத்தி பேசிட்டிருக்கீங்களேன்னு பாத்தா, சம்பளம் எவ்ளோ வாங்கலாம்னு பேசிட்டிருக்கீங்க..? உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு..!” என்று விளையாட்டாக கலாய்த்திருப்பார். அதே கலாய் விஜய்க்கும் பொருந்தலாம் என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் தன்னை ஃபாலோ செய்கிறார்கள் எனும் போது திரைக்கதை தொடர்பான தெளிவும், சமூக பொறுப்பும் விஜய்க்கு அவசியமாகிறது. திரைக்கதையை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தாலும் அது தொடர்பான வல்லுநர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
அவர்களிடம் ஆலோசனை பெறலாம், கதையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒளிந்திருக்கும் அரசியல் கருத்துக்களை கேட்டறியலாம். மக்கள் விரோத கருத்துகள் இருக்கும் பட்சத்தில் அப்படியான திரைக்கதைகளை தவிர்க்கலாம். விஜய் ஒரு சைக்கிள் ரெய்டு போனால் கூட, அதற்கான பின்னணிகள் குறித்து பெரும் அரசியல் விவாதம் நடக்கிறது. அப்படியிருக்க கூடுதலான சமூக பொறுப்பும், அரசியல் புரிதலும் அவருக்கு அவசியமாகிறது. விஜய் கூறியது போல் ரசிகர்கர்களோ அல்லது காலமோ தம்மை தலைவராக்கலாம். ஆனால் யாருக்கான தலைவராக, எதன் பக்கம் நிற்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் விஜய்!








