இங்கிலாந்தில் தூய காற்று விற்பனைக்கு வந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. உற்சாகமாக வெளியே சென்று தூய காற்றை சுவாசிக்க முடியவில்லையே என பலர் வருந்துகின்றனர். அப்படியே வெளியே சென்றாலும் காற்று மாசு காரணமாக உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனை பயன்படுத்தி இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று காற்றை விற்பனை செய்து வருகிறது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சுத்தமான காற்றை பாட்டிலில் அடைத்து வைத்து இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். 500 மி.லி பாட்டிலில் உள்ள காற்று 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளவர்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக இதனை விற்பனை செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை வாங்கி சில நிமிடங்கள் பாட்டிலை திறந்து காற்றை சுவாசித்துக் கொள்ளலாம்.
வேறு சில பகுதிகளிலும் இதுபோன்ற விற்பனையில் ஈடுபடலாமா என அந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. காற்றை விற்பனை செய்யும் அவல நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளதை நினைத்து மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.







