வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே கற்றல் இடைவெளியை நீக்கும் பொருட்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் இணைந்து சேவையாற்ற 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கையரும் என மொத்தம் 86 ஆயிரத்து 550 நபர்கள் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர் எனவும் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் இணைப்பு பாலமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். தன்னார்வலர்களின் செயல்பாட்டை கல்வியாளர்கள் குழு கண்காணிக்கும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.







