பரதநாட்டியக் கலைஞரை கோயிலைவிட்டுத் துரத்திய சம்பவம் : ”நடவடிக்கை வேண்டும்”- டி. எம். கிருஷ்ணா

பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இசைக்கலைஞர் டி. எம். கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார். பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் நேற்று…

பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இசைக்கலைஞர் டி. எம். கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார்.

பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் கோயிலைவிட்டு துரத்தியடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜாகிர் ஹுசைன் தனது முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார். “ நான் தாய்வீடாக கருதும், தினமும் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன். காரணம் என் பெயர்.

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான கண்டனத்தை இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ”இச்சம்பவம் என்னை ஆழமாக பாதித்துள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துலுக்க நாச்சியாருக்கு சிறப்பிடம் தருவதன் மூலமாக ஸ்ரீரங்கம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதை நாம் மறந்துவிட வேண்டாம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.