இளையராஜா அப்படி சொல்லாவிட்டால் கூட அவருக்கு எம்.பி பதவி கொடுக்கலாம் என ஓய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் சென்னையில் நடைபெற்று வருகிறது. காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே ஏராளமான நடிகர்கள் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான ஓய்.ஜி மகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓய்.ஜி. மகேந்திரன் கூறுகையில், “என்னதான் திரைப்படத்துக்கு சென்றுவிட்டாலும், என் பயணம் ஆரம்பித்தது நாடகம் மற்றும் சின்னத்திரையில் தான்.
இதுவரை சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை நான் தவறவிட்டது கிடையாது. நல்ல சேவை செய்யக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, ஓர் நிகழ்ச்சியில் இருந்து வந்து என் கடமையை செய்துள்ளேன். சிறந்த நபர்கள் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெறுபவர்கள் தன்னலம் இல்லாமல், எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் இயங்க வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு பலரும் முடிந்தவரையிலான பணிகளை செய்து வருகின்றனர். இதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அரசியல் குழு போல செயல்படக்கூடாது. நல்லது செய்ய வேண்டும். நல்லது செய்யாவிடினும் கூட பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும். இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டிருப்பது மிகவும் சந்தோஷம். பண்ணைபுரத்தில் இருந்து, பாராளுமன்றம் வரை என்பது அற்புதமான பயணம். சிலர் அம்பேத்கர் – மோடியை ஒப்பிட்டு பேசியதால் தான் இந்தப் பதவி கிடைத்ததாக சொல்கின்றனர். யார் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவரது கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. உண்மையில் அப்படி எதுவுமே சொல்லாவிடினும் கூட அவருக்கு எம்.பி பதவி தரலாம். அவர் அவ்வளவு தகுதியானவர்.” என்றார்.
-ம.பவித்ரா








