உலக வங்கித் தலைவா் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அஜய் பங்கா பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ளார். இவர் விரைவில் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், புதிய தலைவராக இந்தியா, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அஜய் பங்காவை நியமிக்க பரிந்துரைத்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தாா். பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை அஜய் பங்கா திறன்பட வழிநடத்துவாா் என்றும் அவர் தெரிவித்திருந்தாா்.
உலக வங்கியின் இயக்குநா்கள் அஜய் பங்காவின் நியமனத்தை உறுதி செய்யும்பட்சத்தில், உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி, சீக்கியா் என்ற பெருமையை அஜய் பாங்கா பெறுவாா். 63 வயதாகும் அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா். அதற்கு முன் மாஸ்டா் காா்ட் நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் பத்மஸ்ரீ விருதையும் அஜய் பங்கா பெற்றுள்ளாா்.
இதையும் படிக்க: ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி; விமான நிலையத்தில் மலர்தூவி உற்சாக வரவேற்பு
இந்நிலையில், உலக வங்கித் தலைவர் பதவி நியமன பரிந்துரைப்பிற்கு மத்திய நிதி அமைச்சகம் அஜய் பங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கித் தலைவர் பதவி நியமன பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டா் பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில், ‘நிதி, தொழில்நுட்பத் துறைகளில் அஜய் பங்காவின் அனுபவம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். வரும் தலைமுறையினருக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வறுமையை குறைக்கவும், உலகப் பொருளாதார சவால்களை கையாளவும், பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கவும் உலக வங்கி பரிசீலித்து வரும் நிலையில், அஜய் பங்காவின் தோ்வு வலுசோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா








