தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த மின்னல் வேகம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது.
பஞ்சாப் மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழில்துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். வரும் டிசம்பர் மாதம் 31ந்தேதி வரை அவரது பணிக் காலம் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தாமாக முன்வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். விஆர்எஸ் முறையில் ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இப்படி உடனடியாக அவருக்கு தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறைகள் சுதந்திரமானதாக இருக்கும் வகையில் அந்த நடைமுறைகளை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு 3வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அப்போது நேற்றைய விசாரணையின் போது கோரியபடி அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இன்றைய விசாரணையின் போது அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த அவசரம் என்றும் அதீத வேகம் ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுபினர். மே மாதம் 15 ஆம் தேதி தான் காலியிடம் உருவாகும் நிலையில், அருண் கோயலின் கோப்புகள் மின்னல் வேகத்தில் கிளியர் செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, அருண் கோயல் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை தொடர்பாக விளக்கினார். அத்துடன் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது கருத்துக்களை நிறுத்தி வைக்குமாறும், இந்த வழக்கை முழுமையாக ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார். 
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது என்ன கருத்து என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக் கேட்டனர். நாங்கள் அருண் கோயல் தகுதி பற்றி கேட்கவில்லை என்றும் அவருடைய நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையையே கேள்வி கேட்பதாகவும் குறிப்பிட்டனர்.
நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு முறை கேட்கிறோம் நான்கு பேரின் பெயர்களை எப்படி, எந்த அடிப்படையில் நீங்கள் பரிந்துரையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். ஆறு ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது நியமன சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.








