பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற, ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற, ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என அதிமுக கொடிமரம் வைக்க அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை…

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற, ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற, ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என அதிமுக கொடிமரம் வைக்க அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நானும், எனது மனைவியும் அதிமுக கட்சியில் உள்ளோம். எனது மனைவி நாகஜோதி அதிமுக சார்பில், மாநகராட்சி வார்டு எண் 20ல் போட்டியிட்டு மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி செய்து வருகிறார்.

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்கள் பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையரை நேரில் அணுகி அனுமதி கேட்ட பொழுது, பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என தெரிவித்து விட்டனர்.

ஆனால் நான் அனுமதி கேட்கும் இடத்திற்கு அருகிலேயே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதற்கு எந்த அனுமதியும் கிடையாது. இந்த கொடிக் கம்பத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதிமொழி கொடுத்தும், தொடர்ந்து அதிமுக கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இது பாரபட்சமான செயலாகும். எனவே அதிமுக கொடி கம்பம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு, பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் கொடி மரங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது? இதுவரை எத்தனை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் தமிழ்நாடு காவல்துறை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.