அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார்.  ஆனால், ஜோ பைடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்  என்றும் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் தெரிவித்தார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில்,  அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய பின் அதிபர் ஜோ பைடன்   முதன்முறையாக மக்களிடம் உரையாற்றினார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது,

“இது இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம்.  அவர்களுக்கு வழி விடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன்.  நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகினேன்.  நான் பதவியை மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.

மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன்.  ஆனால்,  ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது.  நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது. கமலா ஹாரிஸ் மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர்.  துணை அதிபராக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.

தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.  அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல் இது. நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும். மீதமுள்ள 6 மாத காலம் அதிபராக எனது பணியை தொடர்வேன்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.