நடிகை அனுஷ்காவின் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” படத்தில் தனுஷ் பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்களுடன் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான ‘அருந்ததி’ எனும் படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. இந்த நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் ஜெய சுதா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பாடலை பாட நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. ‘அர்ஜுன் ரெட்டி’ பட இசையமைப்பாளர் ராதன் இந்த படத்தில் ஒரு பாடலை பாட தனுஷை அணுகியதாகவும், அதற்கு தனுஷ் உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் முதல் பாடலான “என்னடா நடக்குது, கொக்கெல்லாம் பறக்குது” என்ற தனுஷ் பாடிய பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனும் வெளியாகி உள்ளது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.







