பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளால் ‘யார் அந்த சார்?’ என அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த கேள்விகளே அதிகம் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சணையன்றி தண்டனை வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ந்து அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று (ஜன.10) இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. அப்போது பொள்ளாச்சி சம்பவத்துடன் அண்ணா பல்கலை சம்பவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பிட்டு பேசினார். நீண்ட நேரம் இது தொடர்பாகவே விவாதம் நடைபெற்றது.
இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமர்ப்பிக்கிறேன். அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன்” என்றார்.
அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவர் அப்பாவும் இருவரும் நாளை ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றார். இதனையடுத்து இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பேரவையில் அதிமுக மற்றும் திமுக சார்பில் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.
இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
“பொள்ளாச்சி சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பின்புதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக 2019 பிப்ரவரி 16ஆம் தேதியே காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் எஸ்பியிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரால் எஸ்பியை 22ஆம் தேதிதான் பார்க்க முடிகிறது. அதன்பின்னர்தான் 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் பெறப்பட்டு, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுதான் உண்மை. இதில் வேறு எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிமுக தரப்பில் எங்கள் ஆதாரங்களையும் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பேரவை மீண்டும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தொடர்ந்து நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.








