பேரறிவாளனின் கருணை மனுவின் தற்போதைய நிலை குறித்து, மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் பேரறிவாளன் தற்போது பரோலில் உள்ளார். இந்நிலையில், தன்னுடைய கருணை மனுவின் நிலை குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்கக்கோரி பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையின் மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது ஏன் என பேரறிவாளன் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான விவரங்களை தரக்கோரி ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, பேரறிவாளனுடைய கருணை மனுவிற்கு மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.








