சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் இரட்டை தலைமைக்கு திரும்பியிருக்கிறது அதிமுக. இதனால் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 23ந்தேதி முதல் அக்கட்சியில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்த நிலையில் அந்த திருப்பங்களையெல்லாம் செல்லாததாக்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று அளித்த தீர்ப்பு.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் அந்தப் பொதுக்குழுவிலேயே கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை எடப்பாடி பழனிசாமி நியமித்தது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியது உள்பட கடந்த ஜூன் 23ந்தேதிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செல்லுபடியாகாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு குறிப்பிடுகிறது. ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ரத்து செல்லாததாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கி இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்தது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது உள்பட ஜூன் 23ந்தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் செல்லாததாகியுள்ளன.
ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அப்போது இருந்த அதிமுகவின் கட்சி கட்டமைப்பு என்ன? யாருக்கு என்ன அதிகாரம்? என்பதை தற்போது காண்போம்.
கட்சி கட்டமைப்பு என்ன? யாருக்கு என்ன அதிகாரம்?
அதிமுக சட்டவிதிகளில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி குறித்து விதி எண் 20ல் கூறப்பட்டிருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் விதி எண் 20 திருத்தப்பட்டது. தொண்டர்கள் விருப்பப்படி அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார் என்றும் அந்த பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்கவோ, நியமனம் செய்யவோ கூடாது என்றும் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
மேலும் 20A, 20B, 20C என புதிதாக 3 விதிகள் உருவாக்கப்பட்டன. அதில் 20Aவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகாரங்கள் என்ன என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மொத்தம் 13 துணைப் பிரிவுகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் துணைப்பிரிவு 3 கூறுவதுபடி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் பதவியில் நீட்டிப்பார்கள்.
துணைப்பிரிவு 4ல் கூறியுள்ளபடி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் கட்சி தொடர்பான தங்களின் கடமைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவற்றை இணைந்தே மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என 2017ம் ஆண்டு செப்டம்பர் பொதுக்குழுவின்போது விதி உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழுவில் இந்த விதி திருத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருகிணைப்பாளரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பான திருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டதா என்கிற கேள்வி தற்போது எழவில்லை.
கட்சியின் பொருளார், செயற்குழு உறுப்பினர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் நியமனம் அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து பெற்றுள்ளனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்தே அந்த பதவிகளுக்கு உரியவர்களை நியமிக்க வேண்டும். ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைப்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்கிறார். அதோ போல் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், தலைமை நிலையச் செயலாளராகவும் தொடர்கிறார்.
புதிதாக பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், தலைமை நிலையச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றால் அதனை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும். தனியாக நியமன முடிவுகளை மேற்கொள்ள முடியாது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் துணைப்பொதுச் செயலாளர் பதவி குறித்து விளக்கும் 21வது விதியே நீக்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் என்கிற பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்குபதில் விதிஎண் 20Bல் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் 5 ஆண்டுகள் அவர்களது பதவி நீடிக்கும் என்றும் அதிமுக சட்டவிதி எண் 20Bல் கூறப்பட்டுள்ளது.
அதன்படி கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி ஆகியோர் தற்போதும் அந்த பதவிகளில் தொடர்கின்றனர். மேலும் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைப்படி இருந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளும் அப்படியே தொடர்கின்றன. அதன்படி பெரும்பாலான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே உள்ளனர். மேலும் அதிமுக விதிஎண் 20Cயின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே பெரும்பாலானோர் உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று அளித்த தீர்ப்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் என்பதை உறுதிப்படுத்தி அவருக்கான சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
எனினும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி தனியாக முடிவெடுக்க முடியாதது, தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளது ஆகியவை கட்சியை வழிநடத்துவதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்னவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரம் இபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
-எஸ்.இலட்சுமணன்