ஆளுநர் பதவி: தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தருணத்தில்  தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவமான பெருமை கிடைத்துள்ளது? அது என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.   ஒரு புறம்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தருணத்தில்  தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவமான பெருமை கிடைத்துள்ளது? அது என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.  

ஒரு புறம் ஆளுநர் பதவிகள் தேவையில்லை என்கிற முழக்கங்கள் அரசியல் வட்டாரங்களில் ஒலித்துக்கொண்டிருக்க, அந்த முழக்கங்களை மறுப்பவர்கள் ஆளுநர் பதவிக்கென பல்வேறு அதிகாரங்களை அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ளதையும், அந்த பதவிக்கான முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்,  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரை அந்த பதவியில் நியமித்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஆளுநர்தான். சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தொடங்கி, ஒருவரின் தண்டனையை குறைக்கும்  அதிகாரம் வரை பல்வேறு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளன. இத்தகைய அதிகாரம்மிக்க ஆளுநர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வகுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் இரண்டுதான். ஒன்று அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றொன்று அவர் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். ஆளுநர் பதவி வகிப்பவர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது மாநில சட்டமன்றங்களின் இரு அவைகளிலோ உறுப்பினராக இருக்ககூடாது, ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிக்ககூடாது என்கிற நிபந்தனைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆளுநருக்கான அடிப்படை தகுதிகள் மேலே கூறிய இரண்டு விஷயங்கள்தான்.

எனவேதான் ஆளுநர் பதவிக்குரியவர்களை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிலிருந்து தேர்ந்தெடுப்பது மத்திய அரசுக்கு சாத்தியமாகிறது. மத்திய அரசின் பரிந்துரைப்படி ஆளுநர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு முன் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் கேரள மாநில ஆளுநராக 1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். அந்த மாநிலத்தின் ஆளுநராக பா. ராமச்சந்திரன் 1982ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை செயல்பட்டார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்ரமணியம் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக 1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பதவி வகித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார மேதையும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான சி.ரங்கராஜன் ஆந்திரபிரதேச ஆளுநராக 1997ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார். 31 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவரும் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளருமான பத்மநாபன் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக  1998ம் ஆண்டு முதல் 2000-ஆவது ஆண்டு வரை செயல்பட்டார். மற்றொரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம். ராஜேந்திரன் ஒடிஷா மாநிலத்தில் 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

தெலங்கானாவின் ஆளுநராக 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்த இ.எஸ்.எல் நரசிம்மனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆந்திரா, தெலங்கானா, சத்தீஷ்கர் என மூன்று மாநிலங்களில்  2007ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளுநர் பதவியை வகித்துள்ளார் இ.எஸ்.எல் நரசிம்மன். தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர், சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநர் பதவியை வகித்தவர் என்கிற பெருமை இ.எஸ்.எல் நரசிம்மனுக்கு உண்டு. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் மத்திய உளவுத்துறையின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் சதாசிவம் 2014 ஆண்டு செப்டம்பர் 5ந்தேதி முதல் 2019ம் ஆண்டு செப்டம்பர் 5ந்தேதி வரை கேரள ஆளுநராக  பதவி வகித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான சண்முகநாதன் 2014ம் ஆண்டு மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2015ம் ஆண்டு மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களின் ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆளுநர் பதவியில் நியமிக்கப்படும் 4வது தமிழராக சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேர்ந்துள்ளார்.  மோடி ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் சண்முகநாதன், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் துறையிலிருந்து வந்த இந்த நான்கு பேரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களாக வலம் வந்தவர்கள்.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு செப்டம்பர் 8ந்தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் தற்போதும் அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார். இதுதவிர கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி புதுவை துணை நிலை ஆளுநர் பதவியும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது, இரண்டு பதவிகளிலும் தற்போதும் அவர் தொடர்ந்து வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கி பாஜகவில், தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இல.கணேசனுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.  பின்னர் மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 27ந்தேதி முதல்  மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த அவர் தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தொகுதியிலிருந்து பாஜக சார்பில் இருமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன்,  பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு பாஜக தலைவர், கட்சியின் கேரள மாநில மேலிடப் பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் ஆளுநர்களாக பதவி வகித்தாலும் அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால் தற்போது இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் என மூன்று தமிழர்கள் ஒரே நேரத்தில் ஆளுநர்களாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மற்றும், புதுவைக்கு பொறுப்பு வகிப்பதால், ஒரே நேரத்தில் 3 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என 4 மாநில நிர்வாகங்களின் அரசியல் சாசன தலைவர்களாக தமிழர்கள் வலம் வரும் பெருமைமிகு தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.