ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று வந்த தீர்ப்பை வரவேற்பதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,000-க்கும் மேற்பட்ட…

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று வந்த தீர்ப்பை வரவேற்பதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில்
அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டாம் இடம் பிடித்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என இன்று தீர்ப்பளித்தது.

நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில், ஓ.பி.ஆர் வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆதலால் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு ஓ.பி.ரவிந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து 2019 தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி வாய்ப்பை இழந்தவரும், தற்போது ஈரோடு சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வழியே கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தீர்ப்பை வரவேற்கிறேன். நியாயமும் தர்மமும் ஒரு நாள் வெல்லும் என்பதை இந்த தீர்ப்பு காட்டியுள்ளது. இதற்காக வாதாடிய வாக்காளரை பாராட்டுகிறேன். தேர்தல் அதிகாரி ஒபிஎஸ்-க்கு ஆதரவாக நடந்து கொண்டார். முறைகேடுகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு தொகுதியில் மட்டும் கூட்டணி தோற்றதால் தான் நான் வழக்கு தொடுக்கவில்லை. இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவிற்கு இருந்த ஒரே மக்களவை உறுப்பினரும் இல்லை என்றாகிவிட்டது.” என்று கூறினார்.

இதே போல், 2019- ஆம் ஆண்டு தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டவரும், தற்போது திமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ள தங்க தமிழ்ச்செல்வனை, தொலைபேசி வழியே நியூஸ் 7 தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது அவர் கூறியதாவது:

“ஒபிஎஸ் செல்வாக்கால், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பல நூறு கோடிகளை செலவு செய்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இதை நீதிமன்றத்திலும் பதிவு செய்துள்ளோம். தாமதமாக வந்தாலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம், மதிக்கிறோம். மேல்முறையீடு செய்தாலும் அவரது வெற்றி செல்லாது.”

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.