“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரிகள் அல்ல” – அமைச்சர் ரகுபதி!

சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து அண்மையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.  அதில் பீகார், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்திவிட்டது. ஆனால் ஆய்வு நடத்தகூட தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல் கடந்த பிப்.11ஆம் தேதி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கலந்துகொண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்பதற்காக சென்னையில் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க  “நாங்கள் எதிரிகள் அல்ல” என்று  சட்டதுறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு சப்ஜெக்ட். மத்திய அரசு எடுத்தால்தான் சரியாக இருக்கும். நாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதற்குண்டான சட்ட வலிமை கிடையாது.

அதனால்தான் மத்திய அரசை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க சொல்லி நாங்கள் வலியுறுத்துகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் எடுப்பது சட்டப்படி செல்லாது. மற்ற மாநிலங்களைப்போல் சர்வே எடுத்து வைத்து என்ன செய்வது? அதை செயல்படுத்த முடியாது. நீதிமன்றம் சென்றால் செல்லாது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.