நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான “மகாராஜா” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல, ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் நடித்துவரும் நிலையில், அண்மையில் அவரது 50வது திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதன்படி விஜய்சேதுபதி நடிக்கும் 50-ஆவது திரைப்படத்தின் டைட்டில் ”மகாராஜா” என அறிவிக்கப்பட்டது. அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
’குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். அஜனிஷ் பி லோக்நாத் இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் ஆக்ஷன் விருந்தாக வரவுள்ளதாக இயக்குனர் நிதிலன் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் விஜய் சேதுபதி கையில் அரிவாளுடன், ரத்தக் கறையுடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.







