90 களுக்கு முற்பகுதிகளில் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பெருமளவு பரவிக் கிடந்தன. அதுபோன்ற மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக பல இயக்கங்கள் தமிழகத்தில் கிளம்பின. ஆனால் தமிழ் திரைத்துறையில் அப்போது முற்போக்கு பேசுவதற்கு கலைஞர் கருணாநிதி போன்ற சில எழுத்தாளர்களே இருந்தனர். அவர்களும் திரையில் தோன்றாமல் திரைக்குப் பின்னால் அவர்கள் வசனங்கள் மூலமே முற்போக்கு கருத்துக்களை பேசினர். முதன்முதலில் தைரியமாக திரையின் முன்னே நின்று மூடநம்பிக்கைகளுக்கு எதிராக முற்போக்கு பேசிய புகழ் கலைவாணரையும் மற்றும் எம்ஆர் ராதாவையுமே சேரும். அது பிளாக் அண்ட் வொயிட் காலம்.
பின் காலம் மாறியது திரைகளில் கலர்களும் மாறியது. ஆனால் பெரிதும் மாறாத மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் அப்போதும் திகழ்ந்து வந்தது. வில்லன்களையும் அடியாட்களையும் அடித்து பறக்கவிடும் தைரியம் கொண்ட ஹீரோக்கள் கூட, திரையில் பேச பயந்த முற்போக்கு சிந்தனைகளை, தன் நகைச்சுவை மூலம் தைரியமாகப் திரையின் முன் நின்று பேச தொடங்கிய சனங்களின் கலைஞன் தான் நகைச்சுவை நடிகர் விவேக்.
முற்போக்கு கருத்துக்களை ஹீரோக்கள் சொற்பொழிவில் பேசும்போது கூட அது சில நேரம் அது மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் தன் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் பல மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகர் விவேக். அது அப்போது ஒரு புதிய ட்ரெண்ட் ஆகவே உருவெடுத்தது என்றே கூறலாம்.
இதன் மூலம் நகைச்சுவை கலைஞர்களுக்கு மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் விவேக்.

திருநெல்வேலி என்னும் திரைப்படத்தின் மூலம் கடவுள் எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கொண்ட பெரியார் சிந்தனைகளை தன் நகைச்சுவை மூலம் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தார். அது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு ஒரு பிரச்சாரம் ஆகவே அமைந்தது என்றே கூறலாம். சங்கு சடங்கு, கருடா பூ போடு, சாமியாராக மாறிய மைல் கற்கள், மீசையினால் வரும் சாதி சண்டைகள் போன்ற எண்ணற்ற முற்போக்கு பெரியாரிய சிந்தனைகளை அந்த படத்தில் பேசியிருந்தார் நடிகர் விவேக். “200 இல்ல, நாநூறு பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா” என்று விவேக் பேசும் வசனம் இன்றளவும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு வசனமாக இருக்கிறது.

இந்த வசனங்கள் அந்த கால மக்களிடம் பெருமளவு வரவேற்கப்பட்டது என்றே கூற வேண்டும். இது மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது மட்டுமல்லாமல் நடிகர் விவேக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து வரும் படங்களிலும் அவர் முற்போக்குக் கருத்துகளையும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பெருவாரியாக வசனங்களை வைத்து பேசினார்.

அவர் தோன்றும் படங்களில் அங்கங்கே ஒரு முற்போக்கு வசனத்தை பேசிவிட்டுப் போவது அவர் வழக்கமாகவே அமைந்தது. “உள்ளுக்குள்ள 72 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு. அதுல ஓடாத தான் இந்த எலுமிச்சம்பழத்தை ஓடப்போகுது” போன்ற வசனங்களும்.. தண்ணில கண்டம் என்று சொல்லும் ஜோசியக்காரர் ரோபோவை நக்கல் அடிப்பது போன்ற காட்சிகளையும் வைத்து தொடர்ந்து தன் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார் நடிகர் விவேக்.

விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் பல நாட்களுக்குப் பின் பல முற்போக்கு கருத்துக்களை திரைப்படம் முழுவதும் நகைச்சுவையாக பேசும் வாய்ப்பு விவேக்கிற்கு கிடைத்தது. அத்திரைப்படத்தில் பிராமண கதாபாத்திரத்தில் நடித்திருந்த விவேக் பிராமணர்களுக்கே உண்டான பாஷையிலும் பாணியிலும் பல முற்போக்கு கருத்துக்களை பேசியிருப்பார். ஒருவர் “அவா வேற வர்ணம் டா” என்றதும் “அவாளும் வரணும்” என்று கூறி சமத்துவத்தை பேசுவார் விவேக். “பழையதை போகியில் போட்டு எரிக்காமல் ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள்” என்று முற்போக்கு கருத்துக்களை பேசியிருப்பார். “அவன் படிப்பான் இவன் துடைப்பான்” என்று கூறுபவரிடம் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான சமமான கல்வியை பற்றி நகைச்சுவை கலந்த பாணியில் மக்களுக்கு எடுத்துரைத்திருப்பார் நடிகர் விவேக்.

இயற்கையின் சமநிலை மீது பெரும் ஆர்வம் கொண்ட நடிகர் விவேக் தன் திரைப்பட வசனங்களின் மூலம் மனித குலத்தின் சமத்துவத்தையும் பெருவாரியாக பேசியிருந்தார். தமிழகத்தில் மூடநம்பிக்கையை எதிர்ப்பதிலும் முற்போக்கு பேசுவதிலும் பெரும் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்கும் இணையான பங்கு நடிகர் விவேக்கும் உண்டு என்பது இன்றியமையாதது. மூடநம்பிக்கை எதிர்ப்பு பேசியது மட்டுமல்லாமல் அது போன்ற தவறான மூடநம்பிக்கை எண்ணங்களை மக்கள் மத்தியில் குறைத்து சாதித்துக் காட்டியவர் விவேக் என்றே கூறவேண்டும். நடித்தோம், சம்பாதித்தோம் என்று சுயநலமாக இல்லாமல், மரம் நடுவது, மக்களுக்காகவும் இயற்கைக்காகவும் குரல் கொடுப்பது, தற்போது கூட கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு என தன்னால் இயன்ற அனைத்தையும் மக்களுக்காக செய்தவர் விவேக். இன்று நம்மை விட்டு பிரிந்த அவரை, இனி 200 அல்ல 400 விவேக் வந்தாலும் ஈடுகட்ட முடியாது.







