வடகாட்டில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை – 14 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் கோயில் திருவிழாவில் நேற்று இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காவலர் உட்பட 17 பேர் காயம் அடைந்ததோடு, ஒரு தரப்பைச் சேர்ந்தவரின் வீடு, 2 இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதோடு ஒரு அரசு பேருந்து மற்றும் போலீஸ் ஜீப் ஒன்றின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் வடகாட்டில் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் திருச்சி சரக டிஐஜி வருண், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியை நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேரை வடகாடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த 13 பேரும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.