தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் போட்டியிட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றனர். இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுமா ? என்ற கேள்வி எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடந்ததாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துபோட்டியிடுவதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







