விடுதலை பட வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் கண்கலங்கியபடியே நடிகர் சூரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேனாம்பேட்டை ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விடுதலை படத்தின் கதாநாயகன் நடிகர் சூரி தெரிவித்ததாவது..
” அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இந்த நிகழ்வு மறக்கமுடியாத நிகழ்வு. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் தான்.
இந்த படத்தை கொடுத்த வெற்றி மாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. படம் வெளியான போது நான் என்னுடைய குல சாமியை கும்பிட்டுக் கொண்டிருந்தேன். நிறைய போன் அழைப்புகள் வந்தது. அவை எல்லாவற்றையும் என்னால் எடுக்க முடியவில்லை.
நேற்று இரவு 5 மணி வரை போன் வந்து கொண்டே இருந்தது. போனில் ரசிகர் ஒருவர் நாங்கள் உங்களின் தற்கொலை படை மாமா, உனக்காக உயிரை கூட கொடுப்பேன் என்று சொல்லி இருந்தான். உதயநிதி போனில் அழைத்தார். படம் நல்லா இருக்கு, ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளீர்கள், சிறப்பாக உள்ளது என்றார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
விஜய் சேதிபதிக்கு இருக்க பக்குவமும் அணுகுமுறையும் தான் அவரை இந்த நிலையில் வைத்துள்ளது. அவரிடம் இருந்து தான் அதை கற்று கொள்ள வேண்டும். ஒரு ஹீரோ சக நடிகனை ஊக்குவித்தால் நன்றாக நடிப்பார்கள். அதை விஜய் சேதுபதி செய்தார். அவருக்கு நன்றி.
எத்தனை நாட்கள் படம் எடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. படம் எப்படி வந்துள்ளது என்பது தான் முக்கியம். அனைவருக்கும் நன்றி.” என நடிகர் சூரி கலங்கியபடியே நன்றி தெரிவித்தார்.







