வேலூர் | மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த 3 வயது குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு!

வேலூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாயமான பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியை சேர்ந்த விவசாய தம்பதி  தரணி-பிரியா. இவர்களின் மூன்று வயது குழந்தை ஜெயப்பிரியா கடந்த செவ்வாய்க்கிழமை(ஜன.28) வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அவரது தாய் வீட்டிற்குள்ளே சென்று, பிறகு வெளியே வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரியா குழந்தையை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். குழந்தை கிடைக்காத நிலையில் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன குழந்தையை போலீசார் தேடி வந்த
நிலையில், ஜெயப்பிரியா வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன பெண் குழந்தை மூன்று நாட்களுக்குப் பின்பு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை வழி தவறி கிணற்றில் விழுந்துவிட்டதா.. இல்லை இதில் வேறு எதாவது குற்றச் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.