பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட்டுகள் அடுத்த வாரம் வரை நிரம்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக தனி விமான மூலம் நேற்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். விமானம் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பார்வைவிட்ட பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்னை-கோவை இடையே முதன்முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொடியசைத்து துவக்கி வைப்பதற்கு முன்னர் வந்தே பாரத் ரயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். ரயிலில் உள்ள வசதிகள் குறித்து அதில் பயணம் செய்யவிருந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று கோவை புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் டிக்கெட்டுகள் அடுத்த வாரம் வரை நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து கோவை செல்ல AC Chair Car வகுப்பிற்கு 1,215 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. AC Executive Chair Car வகுப்பில் 2,310 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலியாக இருக்கும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.
தற்பொழுது வந்தே பாரத் ரயிலின் டிக்கெட்டுகள் குறைந்த கட்டணத்திலிருந்து(AC Chair Car ) அதிக கட்டணம் (AC Executive Chair Car ) வரை அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த வாரம் 16ம் தேதி வரை நிரம்பியுள்ளது.
– யாழன்







