அனைத்து சக்திகளும் பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரால் ஒன்றுபட வேண்டும் எனக் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் மொழி, இன உணர்வு, சமூக நீதி ஆகிய கருத்தாக்கங்கள் நிலைபெற்றதற்கு கருணாநிதியே காரணம் எனக் கூறினார். 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக கட்டிக்காத்ததும், ஸ்டாலினின் கையில் ஒப்படைத்துச் சென்றதும் மகத்தான சாதனை எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் கழகத்தை விட்டுச்சென்றது வருத்தத்தை ஏற்படுத்தியதா என கலைஞரிடம் ஒருமுறை கேட்டேன். அதற்கு ஒருவகையில் அதுவும் நல்லதுதான். எம்ஜிஆர் பிரிந்திருக்காவிட்டால், திராவிடத்திற்கு விரோதமான சக்திகள் எழுந்திருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உன் நினைவிடத்தில் நிற்கிறேன், ஓயாத அலைகளால் உன் தமிழை மொழிபெயர்த்துக் கொண்டேயிருக்கிறது; கடல் நானும் அலைதான் எழுந்தாலும் விழுந்தாலும் உன்புகழே பாடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.