அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகுவதாக அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர்…

அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். 

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார்.  அவரது பதவிக்காலம் நடப்பு ஆண்டோடு முடிவடையவுள்ளதால்,  அதிபர் தேர்தல் களம் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,  இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 37) உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட உள்ளது நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.  குடியரசுக் கட்சியின் டோனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தான் வாபஸ் பெறுவதாகவும் தனது கட்சியைச் சேர்ந்த டோனால்ட் டிரம்பை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தான்.  அதனை உறுதிப்படுத்த நாம் அனைவரும்   பாடுபடுவோம்” என்று அயோவா காகஸில் நடைபெற்ற கூட்டத்தில் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.